நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் கொண்டு குணப்படுத்த முடியும்
மருத்துவ ஞானமே இல்லாத எட்கார் கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கை விரித்த நோயாளிகளுக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும் இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட ஆழ்மன உதவியுடன் தெளிவாக குறிப்பிடுவார்
"ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவனுடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நான் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து கொள்வேன். அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வேன்."எட்கார் கேஸ்
சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.
1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.
கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.
ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?
இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?
அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.
மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.
அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.
பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.
ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
நன்றி
No comments:
Post a Comment