Sunday, 26 May 2019

மாம்பழம் வேண்டாம் - மருத்துவ விளக்கம்

*``மந்தம் ஏற்படலாம்... ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாம்பழம் வேண்டாம்!'' - மருத்துவ விளக்கம்*

குறிப்பிட்ட சீஸனில் மட்டும் கிடைப்பது மாம்பழம். முக்கனிகளுள் ஒன்றான அதை மோந்ததும் கிடைக்கும் அதி அற்புதமான வாசனைக்கு ஈடு இணை கிடையாது. ஆனால் அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும், என்னவெல்லாம் அதில் சமைக்கலாம், எப்படிப் பழுக்க வைக்கலாம் என்கிற தகவலை நமக்கு மருத்துவரும் நிபுணரும் தருகிறார்கள்.

*ஆரோக்கிய பலன்கள் - சித்தமருத்துவர் - மு.கார்த்திகேயன்:*

மாம்பழத்தில் வைட்டமின் C , பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உள்ளன. இதில் நம்மை எனர்ஜியுடன் செயல்பட வைக்கும். அதனால் சீஸன் சமயத்தில் தினம் ஒரு மாம்பழம் எடுத்துக்கொள்வது நல்லது.

மாம்பழத்தில் பெருமளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து (Polysaccharide)இருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.

மாம்பழத்தில் இரும்புச்சத்தாகவும் செயல்படும். அதனால் கர்ப்பிணிகள் கர்ப்ப காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைவிட இரும்புச்சத்து நிறைந்த மாம்பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

மாம்பழங்களில் அதிகமான அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. தேவையான புரதத்தை உடலில் சுரக்க இது உதவி புரிகிறது.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் மாம்பழத்தை உண்டு வரச் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் சுமார் 85 கலோரிகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக உட்கிரகித்து உடலை வளர்க்கச் செய்யும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து அதைச் சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.

கடைகளில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கும் பொழுது சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். ரசாயனங்களைக் கொண்டு பழுக்க வைக்கும் பழங்களை தவிர்த்தல் நன்று. இதை உண்டுவந்தால் தொண்டைக்கட்டு, நாவில் புண்கள், நா வறட்சி, வாந்தி ஆகியன ஏற்படும்.

மாம்பழம் பொதுவாக வெப்ப வீரியத்தைக் கொண்டது. எனவே, அளவிற்கு அதிகமாக உண்பது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும்.

மாத விலக்கு சமயத்தில் பெண்கள் அதிகம் உட்கொள்ளும் பொழுது உதிரப்போக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அளவுடன் சாப்பிடுவது நல்லது.

நன்றாகக் கனிந்த மாம்பழங்களை உண்பது நல்லது. மாம்பழங்களைத் தனியே கடித்துச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதன் உள்ளே பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் மாம்பழத்தை நறுக்கி துண்டுகளாக உண்பது நல்லது.

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் மாம்பழம் சாப்பிட்டால் மந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுப்பதை கூடுமானவரைத் தவிர்க்கலாம்.

*மாங்காய் பழுக்க வைக்கும் முறை:*

மாங்காய்களை வாங்கி வீட்டில் ஒரு சாக்கில் சுற்றி வைத்துப் பழுக்க வைக்கலாம்.

வேப்ப இலையைப் பரப்பி அதன் மீது மாம்பழங்களை வைத்து, வைக்கோலால் மூடி வைக்க இரண்டு நாளில் அவை பழுத்து விடும்.

மாங்காய்களை வாங்கி வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி ஈரத்தைத் துடைத்து இருட்டறையில் வைக்க ஒரே நாளில் மாம்பழமாகக் கனிந்துவிடும்.

*ரெசிப்பிகள்: சமையல் கலைநிபுணர் - கிருஷ்ணகுமாரி*

*வரகு மாங்காய் சாதம்:*

தேவையானவை:

வரகு - ஒரு கப்

துருவிய மாங்காய் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

காய்ந்த மிளகாய் - 3

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

வரகைச் சுத்தம் செய்து உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும். இத்துடன் துருவிய மாங்காய், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். மாங்காய் நன்கு வதங்கியவுடன் வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச்சத்து நிறைந்த உணவு என்பதால் கர்ப்பிணிகள் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

*மாம்பழ ஸ்மூத்தி:*

தேவையானவை:

கம்பு மாவு - 2 கப்

மாம்பழத் துண்டுகள்- ஒரு கப்

தயிர் - 2 கப்

நாட்டுச்சர்க்கரை - 2 டீஸ்பூன்

தேன் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கம்பு மாவை தண்ணீரில் கரைத்து, அடிக்கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கூழ் போன்று காய்ச்சி ஆறவைக்கவும். இத்துடன் மாம்பழம், தயிர், நாட்டுச் சர்க்கரை கலந்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து அரைமணிநேரம் ஃப்ரீட்ஜில் வைத்துப் பருகவும்.

*டிப்ஸ்:*

மாங்காய் ஊறுகாய் போடுகிறீர்கள் எனில் அதிக புளிப்பு கொண்ட நாட்டு மாங்காய்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மாம்பழத்தை பொறுத்த வரை நறுக்காமல் அப்படியே சாப்பிட விருப்பப்படுபவர்கள்தான் அதிகம். மாம்பழங்கள் பழுக்க வைக்க நிறைய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்பதால் மாம்பழத் தோலின் மீது உப்பு வைத்துத் தேய்த்து கழுவிய பின் சாப்பிடவும்.

மாம்பழ ஜாம் செய்பவர்கள் அதிக இனிப்புள்ள காசாலட்டு மாம்பழங்களைத் தேர்வு செய்து ஜாமில் சேர்க்கும் சர்க்கரையின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

மாம்பழ ஜூஸ், மில்க் ஷேக் என மாம்பழத்தை ஜூஸாக்கி சாப்பிடுவதை விட பழமாகச் சாப்பிடுவதே சிறந்தது

முழுமையான மஞ்சள் நிறமாக இருக்கும் மாம்பழத்தை வாங்காமல் சிவப்பு நிறம் கலந்த மாம்பழங்களை வாங்குங்கள்.

ரிட் மனு

ரிட் மனு என்றால் என்ன ?

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

#சட்டம்:

'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!

அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்?

பொது நலன் பாதிக்கப்படும்போது, பொது நல வழக்குகள் (Public Interest Litigation) தொடரலாம்.

1. உதாரணமாக உங்கள் ஏரியா ரோடு மோசமாக இருந்தால், அந்தப் பகுதியின் அதிகாரத்திற்குட்பட்ட அரசுத்துறைகளுக்கு ஒரு மனு கொடுத்தும், அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், அந்தத் துறைக்கு ரோடு போட உத்தரவு போடச் சொல்லி அரசாங்கத்தைக் கேட்கலாம்.

நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு ஃபேக்டரியிலிருந்து புகை வந்து, அந்தப் புகை சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் இருக்கும் மாசுக்கட்டுப்பாடு அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

அறுபது நாட்களுக்குள் அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் சொல்லி, ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகளை மூட வேண்டும் என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்தது கூட அந்தப் பகுதி மக்கள் ‘ரிட்’ மனு தாக்கல் செய்த பின்பு தான்.

ஐந்து வகைகளில் ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

1. முதல் வகை, ‘ரிட் ஆஃப் மாண்டமஸ்’. இதற்கு ஆணையிடும் நீதிப் பேராணை என்று பொருள்.

அதாவது, தனக்கு வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்ட விரோதமான உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ, அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க, ஆணையிட வேண்டும் என்று ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்.

சாலையின் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விடக்கோரி ரிட் மனுவைத் தாக்கல் செய்யலாம்.

2.அடுத்தது ‘செர்ஷியோரரி (certiorari) ரிட்.’

ஒரு ஹை கோர்ட்டின் அதிகாரத்தில் உள்ள, ஒரு கோர்ட் அல்லது, தீர்ப்பு கொடுக்கும் அதிகாரமுள்ள ஒரு அரசு அதிகாரி, சட்ட விரோதமாக, ஒரு உத்தரவு போட்டால், அந்த உத்தரவை ரத்து செய்யவும், அல்லது அந்த குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கோ அல்லது அரசு அதிகாரிக்கோ, சரியான வழிமுறையை உணர்த்தும்படி உத்தரவிடக்கோரி கேட்பதுதான் இந்த ரிட் மனுவின் அடிப்படை.

என்ன புரியவில்லையா? உதாரணமாக, ஒரு சினிமா தியேட்டர் கட்டுவதற்கு கலெக்டரிடம் ‘நோ அப்ஜக்ஷன்’ ஒருவர் கேட்கிறார். அங்கே இருபத்தைந்து அடி தூரத்தில் ஹாஸ்பிடல் இருக்கிறது. சினிமா தியேட்டரால் ஹாஸ் பிடலுக்கு பாதிப்பு வரும், அதனால், நோ அப்ஜக்ஷன் கொடுக்கக் கூடாது என்று பொதுமக்கள் ஆட்சேபித்தும் அந்த ஆட்சேபணையைப் பரிசீலிக்காமல், நோ அப்ஜக்ஷனை கலெக்டர் தந்தால், அந்த உத்தரவை எதிர்த்து ‘செர்ஷியோரரி ரிட்’ மனு தாக்கல் செய்யலாம்.

3.மூன்றாவது ரிட் மனுவிற்கு ‘கோவாரண்டோ’ (Quowarranto) என்று பெயர்.

எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது, தகுதி இல்லா மல், ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ அல்லது தனது பதவி யின் அதிகார வரம்பை மீறி அவர் உத்தரவு பிறப்பித் தாலோ, அதை எதிர்த்து ‘கோவாரண்டோ ரிட்’ தாக்கல் செய்யலாம்.

4.அடுத்தது பிரொகிபிஷன் (Prohibition) ரிட். அதாவது ஒரு நீதி மன்றம் தனது அதிகார வரம்பு மீறி செயல்படாதவாறு தடுப்பத ற்காகப் போடப்படுவது இது.

5.அடுத்தது ‘ஹெபியஸ் கார்பஸ்’ (Hebeas corpus) ரிட்.

இதற்குத் தமிழில் ‘ஆள் கொணர் ஆணை’ என்று பொருள். நமக்குத் தெரிந்த ஒருவர் தவறாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒருவரைக் காணவில்லை, அவரை யாரோ கடத்தி, அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டாலோ, இந்த ரிட் மனுவை நாம் தாக்கல் செய்யலாம்.

இந்த மனுவை விசாரிக்கும் நீதிமன்றம், காவல்துறைக்கு அந்த நபரை, நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்தச் சொல்லி உத்தரவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ‘ஹெபியஸ் கார்பஸ்’ மற்றும் ‘கோவாரண்டோ ரிட்’ மனுக்களை யார் வேண்டு மானாலும் போடலாம்.

ஆனால், மற்ற ரிட் மனுக்களான ‘மாண்ட மாஸ்’  ‘செர்ஷியோரரி’ மற்றும் ‘ப்ரோகிபிஷன் ரிட்’ மனுக்களை பாதிக்கப்பட்ட நபர்கள்தான் தாக்கல் செய்யலாம
*******************************************

ஜென்ம நட்ச்சத்திர மகிமை

*ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும், ஒரு விரிவான அலசல்*

நாம் இந்துக்கள், சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.

அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும்.

பிறந்த நட்ச்சத்திரம் , அந்த நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் . எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி. .

இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்ச்சத்திரங்கள் .

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்.எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள்.

குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, உங்கள் ஜாதகம் மூலம், (தீமைகள் அகல, தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிபிடத்தக்கது.

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது. தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது.

ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன்.

வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.

நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது.

அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திர திதியின் அதி தெய்வம் எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம்.

பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை. பிறந்த நாளை பெரிய பார்டி கொண்டாடுவது ஆங்கில கலாச்சாரமே, இதில் எந்த வித ஜோதிட அனுகூலமோ ரகசியமோ இல்லை.

Monday, 18 March 2019

ஸ்ரீ மாணிக் பிரபு மகாராஜ்.

மதங்களிடையே வெறுப்புணர்வும்
சமூகத்தில் அதிக ஏற்றதாழ்வும்
உச்சபட்ச
கலாச்சார குழப்பங்களும் நிலவிய சூழலில் மானுடத்தின் அவசியம் கருதி மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீதத்தர் எடுத்த ஓர் அவதாரமே ஸ்ரீ மாணிக் பிரபு மகாராஜ்.
ஆம்...
ஆன்ம சாதகர்கள் கூட வழியறியாது திகைத்து நின்ற அந்த காலத்தில் ஸ்ரீ தத்தரின் பிறந்த நாளான 22 டிசம்பர் 1817 ல், அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் லட்வந்தி கிராமத்தில் அவர் பிறந்தார். பெற்றோர் அவருக்கு மாணிக் என்று பெயரிட்டனர்.
ஊரே கொஞ்சும் குழந்தையாக, குறும்புகள் நிறைந்து, இயற்கைக்கு நெருக்கமாய் மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள் மேல் நேசம் கொண்டு வளர்ந்தான் குழந்தை.
அதே சமயம் தம் தெய்வீகத் தன்மையை அவ்வப்போது வெளிக்காட்டவும் தவறவில்லை. தினம் உடன் வந்து விளையாடும் நண்பன் கோவிந்தா சில நாட்களாக வராதது கண்டு, அவன் வீட்டுக்கு மாணிக் செல்ல, கோவிந்தா சிறிது காலம் காய்ச்சலால் அவதிப்பட்டு அன்றுதான் இறந்ததை அறிந்தான் சிறுவன் மாணிக்.
பெருந்துயரால் அவதிப்பட்ட நண்பனின் தாயாரிடம் 'கவலை வேண்டாம் அம்மா. கோவிந்தா உயிரோடுதான் இருக்கிறான். அவனைக் கூப்பிடுங்கள்' என்று வலியுறுத்தி அழைக்கச்செய்ய,  கோவிந்தா உயிர்மீண்டான். இச்செய்தி வேகமாக பரவி விரைவில் மாணிக் பற்றி அந்த பகுதி முழுதும் மக்கள் வியப்போடு பேசத்துவங்கினர்.
எவ்விதக் கவலையும் இன்றி விளையாட்டாய் குழந்தையின் வாழ்க்கை இருப்பதைக் கண்டு அக்கறை கொண்ட பெற்றோர் அவருக்கு உபநயனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அவ்விழாவில் எல்லாம் அறிந்த குழந்தை காயத்ரி மந்திரம் உட்பட அனைத்து மந்திரங்களையும் யாருடைய துணையும் இன்றி மிக சரளமாக உச்சரித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.
பள்ளிக்கு சரியாக செல்லாமல் காடுகளில் திரிந்த மாணிக் வேலைக்கு அனுப்பப்பட்டால் சரியாகி விடுவார் என்று கணக்கு போட்ட உறவினர் அவரை ஒரு வேலையில் சேர்த்தனர். ஆனால் இயற்கையோடு முழுதும் ஒன்றிய, பாதையற்ற பாதையில் அவரது பயணம் முழுவீச்சில் அங்குதான் துவங்கியது.
பணியிடத்தில் இயற்கைக்கு மிக நெருக்கமான சூழல் நிலவ, மாணிக் தம் அகத்துள் வெகுவாய் ஆழ்ந்துபோனார். இயற்கையோடு பூரணாமாய் ஒன்றினார். உலகமும், ஒவ்வொரு உயிரும், பொருளும் எல்லாம் ஒன்றாய், இறையம்சமாய் உணர்ந்தார்.
யாருக்கும் சொல்லாமல் வேறுவேறு இடங்களுக்கு செல்லத்துவங்கினார். செல்லும் இடமெல்லாம் அவர் மரியாதையுடன் நடத்தப்பட்டார். எனினும் பெரும்பாலும் தனிமையில் தவம் செய்வதையே அவர் நாடினார்.
மகனின் நடவடிக்கைகள் குறித்து கலக்கம் கொண்ட பெற்றோரிடம் ஒருநாள், "குழந்தை வேண்டும் என்ற உங்கள் வேண்டுதலை ஏற்று ஸ்ரீ தத்தர் அருளால் நான் உஙகளுக்கு மகனாய் பிறந்தேன். உங்களோடு எனது பணி முடிந்தது. எனக்கிடப்பட்ட பிற பணிகளை நிறைவேற்ற நான் போகவேண்டும். என்னை அனுமதியுங்கள். உங்கள் தேவையின் போது என்னை நினைத்தால் உங்களிடம் உடனே வருவேன்" என்று விபரம் கூறி, வாக்களித்து புறப்பட்டார் மாணிக் பிரபு.
தவம், யாத்திரை என்று நாட்கள் நகர்ந்தன. ஸ்ரீ தத்தர் இருந்த கிர்னார், கங்கோத்ரி, ஹரித்வார், கேதார்நாத், வாரணாசி, திருப்பதி, கனகாபூர் என தம் யாத்திரையை தொடர்ந்த பிரபு, தம்மை நாடி வந்த ஆயிரக்கணக்க்கான அன்பர்களுக்கு தம் ஆசியையும், அவர்கள் கேட்ட வரங்களையும் வாரிவழங்கினார்.
ஒருமுறை தமது அடியார் சிலருடன் சென்று கொண்டிருக்கையில் இரு நதிகள் சேரும் சங்கமத்தில் ஓர் அத்தி மரத்தடியில் அமர்ந்து தவமியற்றினார். அப்போது தமது அமைப்பை நிறுவ அவ்விடமே உகந்தது எனக்கண்டார். அதுவே இன்று மாணிக் நகர் என்றழைக்கப்படும் ஆன்மீகத் தலமாகும். அப்போதில் இருந்து குறிப்பாக இந்துக்களையும் முகம்மதியரையும் சம அளவில் ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது.
முதலில் அங்கு பிரபுவுக்கு ஒரு குடிலும், அதில் அடியவர்களுக்கு பிரபு தரிசனம் வழங்க வசதியாக அவருக்கு ஓர் ஆசனமும் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் நாட்டின் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சந்தேகம், பிரச்சனைகள் தீர்க்க வந்தனர். சிலரிடம் கேட்டும், பலரிடம் கேட்காமலேயும் பிரபு அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். அடியவர்கள் அனைவரையும் சமமாக நடத்திய பிரபு, 'நம்பிக்கை' என்ற ஒரே தட்சிணையை தவிர வேறெதையும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.
தம் அவதார நோக்கம் நிறைவேறியதையும், தம் பூவுலக நாட்கள் முடிவுக்கு வருவதையும் உணர்ந்த பிரபு, தம் அடியவர்கள் சிலரை மட்டும் அழைத்து தாம் புறப்பட இருப்பதையும், அதற்கு பின் அவர்கள் எவ்வாறு தம் பணியை தொடர வேண்டும் என்பதையும் விளக்கினார்.
சிலநாட்களில் பிரபுவின் முதுகில் ஒரு கட்டி ஏற்பட்டது. தம் சமாதி இடத்தை தேர்வு செய்த பிரபு அங்கு சமாதிக்கான பள்ளம் தோண்ட செய்தார். எனினும் விஷயம் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டது. அந்த வருடத்துக்கான ஸ்ரீதத்த ஜெயந்தியும் வந்தது. அதேனாள் முகம்மதியருக்கும் ஒரு முக்கிய நாளாய் அமைந்தது. இருமதத்திலும் ஏராளமானோர் மாணிக் நகரில் கூடினர். பிரபுவுக்கு ஏற்பட்ட கட்டியும் துரிதமாக பெரிதாகி, வலிமிகுந்தது. அடுத்த நாள் ஏகாதசி, கீதை ஜெயந்தி என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாள். 29.11.1865... பிரபு தம் சகோதரரின் இரு மகன்களை அழைத்து தமது ஆன்ம வாரிசுகளாக்கி, 'ஸ்ரீ மாணிக் பிரபு சம்பிரதாயம்: என்னும் பாரம்பரியத்தை உருவாக்கினார்.
பின்னர் பிரபு தம் சமாதிக்கு குழி வெட்டப்பட்ட குடிலை நோக்கி நடந்தார். வழக்கத்தை விட அவர் முகம் பேரொளி வீச, ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தார் பிரபு. பள்ளத்துக்குள் பத்மாசனத்தில் அமர்ந்த பிரபு, யோகமுறைப்படி  மஹாசமாதி அடைந்தார். நெருங்கிய அடியவர்களால் அந்த குழி மெல்ல மூடப்பட்டது.
அவர் மீது நம்பிக்கை உள்ள அடியவர்களுக்கு இன்றும், என்றும் துணை நின்று, வரமளித்து வழிகாட்டுகிறார்.

Tuesday, 15 January 2019

*குழந்தை வளர்ப்பு:*

  *குழந்தை வளர்ப்பு:*

*"ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறுதான் அமையும். பெற்றோர்களுடைய வினைத்தொடரே குழந்தை. நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள் உடலை, உயிரை, அறிவைச் செம்மையாகப் பேணிக் காக்க வேண்டும். தவம், உடற்பயிற்சி ஆராய்ச்சி இவற்றால் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.*

*அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் போதைப் பொருட்களை உட்கொண்ட மயக்கத்திலும், இருவரில் ஒருவர் வருத்தமாகவோ, நோயுற்றோ இருக்கும் நாளில் ஒரு குழந்தை கருத்தரிக்குமேயானால், அது உடலிலும், அறிவிலும், தரம் குறைந்ததாகவே அமையும். மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் மனம் உற்சாகமாக இருக்கும்படி அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிவின் விழிப்பில் உற்பத்தியாகும் குழந்தை, உடல் அறிவு நலன்களோடு, குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் நலம் விளைக்கத்தக்க நல்நிதியாக அமையும்.*

*பிறந்த பிறகும் வளர்க்கும் முறையில் மிகவும் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். அந்தக் குழந்தை எந்த எந்தச் செயலில் ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தச் செயல்களைப் பெற்றோர்கள் குழந்தையின் எதிரில் செய்யவே கூடாது.   கடைசியாக மக்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்பது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை. அவர்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற கல்வியை கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்."*

                         *வாழ்க வளமுடன்*

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

         *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

எளிய முறை குண்டலினியோகா

அறிவுக்கு ஒரு பிறவி  -  குருவின் உயிர்ச்சேர்க்கை

எளிய முறை குண்டலினியோகா (Simplified Kundalini Yoga)

குருவின் ஆற்றல் துணை கொண்டு குண்டலினி யோக (Simplified Kundalini Yoga) தீட்சை பெற்ற பின்பு, ஆரம்பகட்ட சாதகனின் மனம் அவனுடைய உயிரை உணர்வாகப் பெற இயலும்.

அவன் எதை உணர்கிறான் ?.. ஓர் ஆற்றல் இருக்கிறது. ஓர் இயக்கம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, அது எது என்றால் அதுதான் அவனுடைய உயிர்.

அவனுடைய ஆன்மாவே அவனை உணர்கிறது. இதுவரையில் உருவமாக புலன்கள் மூலமாக அதை உணர முடியவில்லை. மனதின் நுண்ணிய நிலையில் ஆக்கினையில் (Agna Chakra) ஊரு உணர்ச்சியாகப் பெறுகிறான். உணர்ச்சியாகப் பெற்ற பிறகு, அந்த உணர்ச்சியையே மனதினால் நோக்கும்போது மனம் லயமாகிறது.

அறிவை அடக்க நினைத்தால் அலையும்
அறிவை அறிய நினைத்தால் அடங்கும்.

அறிவு நிலைபெற வேண்டுமானால், அதை அறிய வேண்டும்.
மனம் (Mind) தன்னுடைய பிறப்பிடத்தை நோக்கிச் சென்று, ஆழ்ந்து, ஆழ்ந்து, அதிலேயே லயமாக வேண்டும்.

*இதுவரைக்கும் உருவங்களாக - குணங்களாகவே செயல்பட்ட மனம் உருவமற்ற நிலையிலே குறுகி நுணுகி நிற்க கொஞ்ச நாளாகும். என்றாலும் 'குண்டலினியோக தவம்' (Simplified Kundalini Yoga) தொடங்கிய நாள் தொட்டு மனதிற்கு உறுதி, தெளிவு இவைகளெல்லாம் உண்டாகும்.

உயிர் - மேலே எழுப்பப்பட வேண்டும்.

அதன் இயக்கத்தை, இயக்க மையத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே யோகத்திற்கு (Meditation) முதல் படியாகும்.

அதற்கென நீண்டகாலம் செலவிட தேவையில்லை. நாம் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' (World Community Service Center) மூலமாகக் "குண்டலினியோகத்தை" வெகு எளிமையாக்கி விட்டோம்.

மூச்சுப் பயிற்சி வேண்டியது இல்லை. மந்திர ஜெபம் தேவை இல்லை.

முதலிலேயே அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போதிய அளவு சேமித்து வைத்திருக்கும் ஜீவகாந்த (Bio Magnetic Force) ஆற்றல் துணை கொண்டு மூலாதாரத்தில் இருந்து தட்டி எழுப்பி மேலே கொண்டு வந்து தொட்டு உணர்த்தி நிறுத்தி விடுகிறார்கள்.

இதை ஸ்பரிச தீட்சை என்று சொல்வார்கள்.

பயிற்சியாளர், குருவின் ஆற்றலால் தூண்டப்பட்டு தனது உயிராற்றலை உணர்கிறார் (the life force of the aspirant responses to the life force of the master) அது தான் உண்மை.

அந்த உணர்வையே (Bio Current) மனதால் நினைக்க வேண்டியது தான், அந்த உணர்வை மனதால் நோக்க வேண்டியது தான் (Mentally observe the life force). மனதை உயிர் உணர்வின் மீது செலுத்துகிறோம் Bio Feed Back என்று சொல்வார்கள்.

அறிவில் முழுமை பெற வேண்டும் என்ற எண்ணமும், இறைநிலையை அடைய வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் வர வேண்டுமானால் அதற்கு
உயிரைப் பற்றி அறிந்தவர்களுடைய உயிர் ஆற்றல் பயிற்சியாளரிடம் சேர வேண்டும்.

பாலுக்கு உரை ஊற்றுவது போல, குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போதுதான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது அறிவுக்கு ஒரு பிறவியும் உண்டாகி விடுகிறது.

மனதை உயிராற்றலின் (Life Force) மீது செலுத்தி தவமியற்றும்போது ஜீவகாந்தம் (Bio Magnetism) சேமிக்கப்படுவதால் உடல் நலம் நன்றாக இருக்கும். எத்தனை விதமான மன சம்மந்தமான வியாதிகள் உள்ளனவோ எல்லாம் தானாகவே போய்விடும்.

தினமும் சில நிமிடங்கள் பயிலும் குண்டலினியோகத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் உயிர்ச்சக்தியை முறையாகச் சேமித்து அதன் குறைந்தபட்ச அளவுக்குக் (Minimum Critical Level) கொஞ்சம் கூடுதலாக வைத்துக் கொண்டோமேயானால், உடலும் நன்றாக இருக்கும். மனமும் நன்றாக இருக்கும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்,  வாழ்க வளமுடன்!!

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி