Monday, 18 March 2019

ஸ்ரீ மாணிக் பிரபு மகாராஜ்.

மதங்களிடையே வெறுப்புணர்வும்
சமூகத்தில் அதிக ஏற்றதாழ்வும்
உச்சபட்ச
கலாச்சார குழப்பங்களும் நிலவிய சூழலில் மானுடத்தின் அவசியம் கருதி மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீதத்தர் எடுத்த ஓர் அவதாரமே ஸ்ரீ மாணிக் பிரபு மகாராஜ்.
ஆம்...
ஆன்ம சாதகர்கள் கூட வழியறியாது திகைத்து நின்ற அந்த காலத்தில் ஸ்ரீ தத்தரின் பிறந்த நாளான 22 டிசம்பர் 1817 ல், அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் லட்வந்தி கிராமத்தில் அவர் பிறந்தார். பெற்றோர் அவருக்கு மாணிக் என்று பெயரிட்டனர்.
ஊரே கொஞ்சும் குழந்தையாக, குறும்புகள் நிறைந்து, இயற்கைக்கு நெருக்கமாய் மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள் மேல் நேசம் கொண்டு வளர்ந்தான் குழந்தை.
அதே சமயம் தம் தெய்வீகத் தன்மையை அவ்வப்போது வெளிக்காட்டவும் தவறவில்லை. தினம் உடன் வந்து விளையாடும் நண்பன் கோவிந்தா சில நாட்களாக வராதது கண்டு, அவன் வீட்டுக்கு மாணிக் செல்ல, கோவிந்தா சிறிது காலம் காய்ச்சலால் அவதிப்பட்டு அன்றுதான் இறந்ததை அறிந்தான் சிறுவன் மாணிக்.
பெருந்துயரால் அவதிப்பட்ட நண்பனின் தாயாரிடம் 'கவலை வேண்டாம் அம்மா. கோவிந்தா உயிரோடுதான் இருக்கிறான். அவனைக் கூப்பிடுங்கள்' என்று வலியுறுத்தி அழைக்கச்செய்ய,  கோவிந்தா உயிர்மீண்டான். இச்செய்தி வேகமாக பரவி விரைவில் மாணிக் பற்றி அந்த பகுதி முழுதும் மக்கள் வியப்போடு பேசத்துவங்கினர்.
எவ்விதக் கவலையும் இன்றி விளையாட்டாய் குழந்தையின் வாழ்க்கை இருப்பதைக் கண்டு அக்கறை கொண்ட பெற்றோர் அவருக்கு உபநயனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அவ்விழாவில் எல்லாம் அறிந்த குழந்தை காயத்ரி மந்திரம் உட்பட அனைத்து மந்திரங்களையும் யாருடைய துணையும் இன்றி மிக சரளமாக உச்சரித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.
பள்ளிக்கு சரியாக செல்லாமல் காடுகளில் திரிந்த மாணிக் வேலைக்கு அனுப்பப்பட்டால் சரியாகி விடுவார் என்று கணக்கு போட்ட உறவினர் அவரை ஒரு வேலையில் சேர்த்தனர். ஆனால் இயற்கையோடு முழுதும் ஒன்றிய, பாதையற்ற பாதையில் அவரது பயணம் முழுவீச்சில் அங்குதான் துவங்கியது.
பணியிடத்தில் இயற்கைக்கு மிக நெருக்கமான சூழல் நிலவ, மாணிக் தம் அகத்துள் வெகுவாய் ஆழ்ந்துபோனார். இயற்கையோடு பூரணாமாய் ஒன்றினார். உலகமும், ஒவ்வொரு உயிரும், பொருளும் எல்லாம் ஒன்றாய், இறையம்சமாய் உணர்ந்தார்.
யாருக்கும் சொல்லாமல் வேறுவேறு இடங்களுக்கு செல்லத்துவங்கினார். செல்லும் இடமெல்லாம் அவர் மரியாதையுடன் நடத்தப்பட்டார். எனினும் பெரும்பாலும் தனிமையில் தவம் செய்வதையே அவர் நாடினார்.
மகனின் நடவடிக்கைகள் குறித்து கலக்கம் கொண்ட பெற்றோரிடம் ஒருநாள், "குழந்தை வேண்டும் என்ற உங்கள் வேண்டுதலை ஏற்று ஸ்ரீ தத்தர் அருளால் நான் உஙகளுக்கு மகனாய் பிறந்தேன். உங்களோடு எனது பணி முடிந்தது. எனக்கிடப்பட்ட பிற பணிகளை நிறைவேற்ற நான் போகவேண்டும். என்னை அனுமதியுங்கள். உங்கள் தேவையின் போது என்னை நினைத்தால் உங்களிடம் உடனே வருவேன்" என்று விபரம் கூறி, வாக்களித்து புறப்பட்டார் மாணிக் பிரபு.
தவம், யாத்திரை என்று நாட்கள் நகர்ந்தன. ஸ்ரீ தத்தர் இருந்த கிர்னார், கங்கோத்ரி, ஹரித்வார், கேதார்நாத், வாரணாசி, திருப்பதி, கனகாபூர் என தம் யாத்திரையை தொடர்ந்த பிரபு, தம்மை நாடி வந்த ஆயிரக்கணக்க்கான அன்பர்களுக்கு தம் ஆசியையும், அவர்கள் கேட்ட வரங்களையும் வாரிவழங்கினார்.
ஒருமுறை தமது அடியார் சிலருடன் சென்று கொண்டிருக்கையில் இரு நதிகள் சேரும் சங்கமத்தில் ஓர் அத்தி மரத்தடியில் அமர்ந்து தவமியற்றினார். அப்போது தமது அமைப்பை நிறுவ அவ்விடமே உகந்தது எனக்கண்டார். அதுவே இன்று மாணிக் நகர் என்றழைக்கப்படும் ஆன்மீகத் தலமாகும். அப்போதில் இருந்து குறிப்பாக இந்துக்களையும் முகம்மதியரையும் சம அளவில் ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது.
முதலில் அங்கு பிரபுவுக்கு ஒரு குடிலும், அதில் அடியவர்களுக்கு பிரபு தரிசனம் வழங்க வசதியாக அவருக்கு ஓர் ஆசனமும் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் நாட்டின் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சந்தேகம், பிரச்சனைகள் தீர்க்க வந்தனர். சிலரிடம் கேட்டும், பலரிடம் கேட்காமலேயும் பிரபு அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். அடியவர்கள் அனைவரையும் சமமாக நடத்திய பிரபு, 'நம்பிக்கை' என்ற ஒரே தட்சிணையை தவிர வேறெதையும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.
தம் அவதார நோக்கம் நிறைவேறியதையும், தம் பூவுலக நாட்கள் முடிவுக்கு வருவதையும் உணர்ந்த பிரபு, தம் அடியவர்கள் சிலரை மட்டும் அழைத்து தாம் புறப்பட இருப்பதையும், அதற்கு பின் அவர்கள் எவ்வாறு தம் பணியை தொடர வேண்டும் என்பதையும் விளக்கினார்.
சிலநாட்களில் பிரபுவின் முதுகில் ஒரு கட்டி ஏற்பட்டது. தம் சமாதி இடத்தை தேர்வு செய்த பிரபு அங்கு சமாதிக்கான பள்ளம் தோண்ட செய்தார். எனினும் விஷயம் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டது. அந்த வருடத்துக்கான ஸ்ரீதத்த ஜெயந்தியும் வந்தது. அதேனாள் முகம்மதியருக்கும் ஒரு முக்கிய நாளாய் அமைந்தது. இருமதத்திலும் ஏராளமானோர் மாணிக் நகரில் கூடினர். பிரபுவுக்கு ஏற்பட்ட கட்டியும் துரிதமாக பெரிதாகி, வலிமிகுந்தது. அடுத்த நாள் ஏகாதசி, கீதை ஜெயந்தி என்று ஸ்ரீகிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாள். 29.11.1865... பிரபு தம் சகோதரரின் இரு மகன்களை அழைத்து தமது ஆன்ம வாரிசுகளாக்கி, 'ஸ்ரீ மாணிக் பிரபு சம்பிரதாயம்: என்னும் பாரம்பரியத்தை உருவாக்கினார்.
பின்னர் பிரபு தம் சமாதிக்கு குழி வெட்டப்பட்ட குடிலை நோக்கி நடந்தார். வழக்கத்தை விட அவர் முகம் பேரொளி வீச, ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்தார் பிரபு. பள்ளத்துக்குள் பத்மாசனத்தில் அமர்ந்த பிரபு, யோகமுறைப்படி  மஹாசமாதி அடைந்தார். நெருங்கிய அடியவர்களால் அந்த குழி மெல்ல மூடப்பட்டது.
அவர் மீது நம்பிக்கை உள்ள அடியவர்களுக்கு இன்றும், என்றும் துணை நின்று, வரமளித்து வழிகாட்டுகிறார்.

Tuesday, 15 January 2019

*குழந்தை வளர்ப்பு:*

  *குழந்தை வளர்ப்பு:*

*"ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறுதான் அமையும். பெற்றோர்களுடைய வினைத்தொடரே குழந்தை. நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள் உடலை, உயிரை, அறிவைச் செம்மையாகப் பேணிக் காக்க வேண்டும். தவம், உடற்பயிற்சி ஆராய்ச்சி இவற்றால் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.*

*அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் போதைப் பொருட்களை உட்கொண்ட மயக்கத்திலும், இருவரில் ஒருவர் வருத்தமாகவோ, நோயுற்றோ இருக்கும் நாளில் ஒரு குழந்தை கருத்தரிக்குமேயானால், அது உடலிலும், அறிவிலும், தரம் குறைந்ததாகவே அமையும். மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் மனம் உற்சாகமாக இருக்கும்படி அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிவின் விழிப்பில் உற்பத்தியாகும் குழந்தை, உடல் அறிவு நலன்களோடு, குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் நலம் விளைக்கத்தக்க நல்நிதியாக அமையும்.*

*பிறந்த பிறகும் வளர்க்கும் முறையில் மிகவும் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். அந்தக் குழந்தை எந்த எந்தச் செயலில் ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தச் செயல்களைப் பெற்றோர்கள் குழந்தையின் எதிரில் செய்யவே கூடாது.   கடைசியாக மக்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்பது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை. அவர்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற கல்வியை கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்."*

                         *வாழ்க வளமுடன்*

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

         *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*

🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

எளிய முறை குண்டலினியோகா

அறிவுக்கு ஒரு பிறவி  -  குருவின் உயிர்ச்சேர்க்கை

எளிய முறை குண்டலினியோகா (Simplified Kundalini Yoga)

குருவின் ஆற்றல் துணை கொண்டு குண்டலினி யோக (Simplified Kundalini Yoga) தீட்சை பெற்ற பின்பு, ஆரம்பகட்ட சாதகனின் மனம் அவனுடைய உயிரை உணர்வாகப் பெற இயலும்.

அவன் எதை உணர்கிறான் ?.. ஓர் ஆற்றல் இருக்கிறது. ஓர் இயக்கம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, அது எது என்றால் அதுதான் அவனுடைய உயிர்.

அவனுடைய ஆன்மாவே அவனை உணர்கிறது. இதுவரையில் உருவமாக புலன்கள் மூலமாக அதை உணர முடியவில்லை. மனதின் நுண்ணிய நிலையில் ஆக்கினையில் (Agna Chakra) ஊரு உணர்ச்சியாகப் பெறுகிறான். உணர்ச்சியாகப் பெற்ற பிறகு, அந்த உணர்ச்சியையே மனதினால் நோக்கும்போது மனம் லயமாகிறது.

அறிவை அடக்க நினைத்தால் அலையும்
அறிவை அறிய நினைத்தால் அடங்கும்.

அறிவு நிலைபெற வேண்டுமானால், அதை அறிய வேண்டும்.
மனம் (Mind) தன்னுடைய பிறப்பிடத்தை நோக்கிச் சென்று, ஆழ்ந்து, ஆழ்ந்து, அதிலேயே லயமாக வேண்டும்.

*இதுவரைக்கும் உருவங்களாக - குணங்களாகவே செயல்பட்ட மனம் உருவமற்ற நிலையிலே குறுகி நுணுகி நிற்க கொஞ்ச நாளாகும். என்றாலும் 'குண்டலினியோக தவம்' (Simplified Kundalini Yoga) தொடங்கிய நாள் தொட்டு மனதிற்கு உறுதி, தெளிவு இவைகளெல்லாம் உண்டாகும்.

உயிர் - மேலே எழுப்பப்பட வேண்டும்.

அதன் இயக்கத்தை, இயக்க மையத்தை மாற்றியமைக்க வேண்டும். அதுவே யோகத்திற்கு (Meditation) முதல் படியாகும்.

அதற்கென நீண்டகாலம் செலவிட தேவையில்லை. நாம் 'உலக சமுதாய சேவா சங்கத்தின்' (World Community Service Center) மூலமாகக் "குண்டலினியோகத்தை" வெகு எளிமையாக்கி விட்டோம்.

மூச்சுப் பயிற்சி வேண்டியது இல்லை. மந்திர ஜெபம் தேவை இல்லை.

முதலிலேயே அந்தப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போதிய அளவு சேமித்து வைத்திருக்கும் ஜீவகாந்த (Bio Magnetic Force) ஆற்றல் துணை கொண்டு மூலாதாரத்தில் இருந்து தட்டி எழுப்பி மேலே கொண்டு வந்து தொட்டு உணர்த்தி நிறுத்தி விடுகிறார்கள்.

இதை ஸ்பரிச தீட்சை என்று சொல்வார்கள்.

பயிற்சியாளர், குருவின் ஆற்றலால் தூண்டப்பட்டு தனது உயிராற்றலை உணர்கிறார் (the life force of the aspirant responses to the life force of the master) அது தான் உண்மை.

அந்த உணர்வையே (Bio Current) மனதால் நினைக்க வேண்டியது தான், அந்த உணர்வை மனதால் நோக்க வேண்டியது தான் (Mentally observe the life force). மனதை உயிர் உணர்வின் மீது செலுத்துகிறோம் Bio Feed Back என்று சொல்வார்கள்.

அறிவில் முழுமை பெற வேண்டும் என்ற எண்ணமும், இறைநிலையை அடைய வேண்டும் என்ற ஒரு பொறுப்பும் வர வேண்டுமானால் அதற்கு
உயிரைப் பற்றி அறிந்தவர்களுடைய உயிர் ஆற்றல் பயிற்சியாளரிடம் சேர வேண்டும்.

பாலுக்கு உரை ஊற்றுவது போல, குருவின் உயிர்ச்சக்தியும் சிறிது சேரும்போதுதான் உடலோடு எடுத்த பிறவி மாத்திரம் அல்லாது அறிவுக்கு ஒரு பிறவியும் உண்டாகி விடுகிறது.

மனதை உயிராற்றலின் (Life Force) மீது செலுத்தி தவமியற்றும்போது ஜீவகாந்தம் (Bio Magnetism) சேமிக்கப்படுவதால் உடல் நலம் நன்றாக இருக்கும். எத்தனை விதமான மன சம்மந்தமான வியாதிகள் உள்ளனவோ எல்லாம் தானாகவே போய்விடும்.

தினமும் சில நிமிடங்கள் பயிலும் குண்டலினியோகத்தின் (Simplified Kundalini Yoga) மூலம் உயிர்ச்சக்தியை முறையாகச் சேமித்து அதன் குறைந்தபட்ச அளவுக்குக் (Minimum Critical Level) கொஞ்சம் கூடுதலாக வைத்துக் கொண்டோமேயானால், உடலும் நன்றாக இருக்கும். மனமும் நன்றாக இருக்கும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்,  வாழ்க வளமுடன்!!

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

Tuesday, 20 November 2018

*கணித மேதை* *சகுந்தலா தேவி

நவம்பர் 4

*கணித மேதை* *சகுந்தலா தேவி பிறந்த தினம்*

     🔣 கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன. ஆனாலும், அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால் அதில் பல ஆக்கபூர்வ முயற்சிகள் செய்தவர், கணித மேதை சகுந்தலா தேவி.

    🔣 1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி, கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகுந்தலா. இவருடைய தந்தை ஒரு சர்க்கஸில் வேலைபார்த்து வந்தார்.

     🔣  சுவாரஸ்யமான வித்தைகளை ரசிகர்கள் முன் செய்துகாட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தவருக்கு, தன் வீட்டிலேயே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது.

     🔣 சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா விளையாட்டுக்குச் செய்துகாட்ட,  அதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மூன்று வயது சகுந்தலா, ஒருநாள், 'நானும் கொஞ்சம் சீட்டில் வித்தை காட்டட்டுமா?' என்று கேட்டு, தந்தையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.

     🔣  'இனிமேல் நாம் சர்க்கஸ் வேலைக்குப் போக வேண்டியதில்லை. இந்த சீட்டு வித்தை போதும்' எனத் தன் மகள் சகுந்தலாவுடன் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் அவர்.

     🔣 வித்தை மூலம் வருமானம் வந்ததோடு, சகுந்தலாவின் திறமையும் வெளிப்பட்டது. தன் ஆறு வயதில் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார்.

      🔣 கணிதப் புதிர்களுக்கு கம்ப்யூட்டர், கால்குலேட்டர் இயந்திரங்களின் வேகத்தை முந்தி விடையளிக்கும் திறமை பெற்றிருந்தவர் சகுந்தலா. தன் கணிதத் திறமையை உலகறியச் செய்ய, அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.

     🔣 1977-ம் ஆண்டு 201-க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இரண்டு 13 இலக்க எண்களைப் (7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  பெருக்கி, 28 விநாடிகளில் விடை கூறி, உலகையே வியக்கவைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்டது.  இதுவே அவரது  உலக சாதனையானது.

       🔣 அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு வந்தபோது, சகுந்தலாவின் வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா தெரியவில்லை. சோதித்துப்பார்த்துவிடலாம் எனக் களம் இறங்கினர். 

    🔣 அவர்கள் கொடுத்த
91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள். கம்ப்யூட்டர், 13,000 கட்டளைகளுக்குப் பின் ஒரு நிமிடத்தில் பதில் சொல்லத் தயாரானபோது, சகுந்தலா, 546372891 என
10 நொடிகள் முன்னதாகவே சொல்லிவிட்டார்.

     🔣 ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.

     🔣 கணிதத்தில் மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும் வல்லவராக இருந்தார் சகுந்தலா. பின்வரும் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் வகையில், கணிதவியலைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகங்கள் பல.

     🔣 ‘புக் நம்பர்ஸ்’, ‘பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’, ‘இன் தி வொண்டேர்லேண்ட் ஆஃப் நம்பர்ஸ்’, ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’ என அந்த நூல்கள் அவர் திறமையின் சான்றுகளாக, நமக்குப் பயன் தந்துகொண்டிருக்கின்றன.

      🔣 உடல் நலக் குறைவினால், 2013 ஏப்ரல் 3-ம் தேதி காலமானார் சகுந்தலா தேவி. இந்தியாவின் இந்த பெண் கணித மேதை, மறக்கமுடியாத ஆளுமை.

Sunday, 18 November 2018

கணினி

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றூராக மாற்றிவிட்டது. தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் நம்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களால் ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூட உடனுக்குடன் மற்றோரிடத்தில் அறிய முடிகிறது. இவற்றில் கணினியின் பங்கு அளப்பரியது. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுப்பிடிப்பான கணினி, சில நொடிகளில் மில்லியன் கணக்குகளைச் செய்துகாட்டும். இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப்போன்று நுண்ணறிவுத் திறனோடு வேலைச்செய்யும். கணினி இன்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது.

கணினி (computer) என்பது கட்டளைத் தொகுதிகள் (instruction sets) அல்லது நிரல்களின் (programs) மூலம் சில பணிகளை அல்லது கணக்குகளைச் செய்யும் இயந்திரம். முதன்முதலில் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட முழுமையான எலக்ட்ரானிக் கணினிகளில் பிரம்மாண்டமாக இருந்தன. அவற்றில் பலர் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது. அந்தத் தொடக்க காலத்துக் கணினிகளுடன் ஒப்பிடும்போது இன்றைய கணினிகள் பிரமிப்பூட்டுகின்றன. அவை பழைய கணினிகளை விட பல்லாயிரம் மடங்கு வேகமாக இயங்குவது மட்டுமல்ல, அவற்றை உங்கள் மேஜை மேல், மடி மேல், அல்லது சட்டைப் பைக்குள் கூட வைக்கலாம்.

பொதுவாக கணினி இயந்திரம் - வன்பொருள் (hardware) மற்றும் மென்பொருள் (software) இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது. வன்பொருள் (hardware) என்பது கணினியில் நீங்கள் பார்க்கவும் தொடவும் முடியும் பாகங்களைக் குறிக்கிறது; இதில் கணினிப் பெட்டியும் அதில் உள்ள அனைத்தும் அடங்கும். வன்பொருட்களில் மிக முக்கியமானது உங்கள் கணினியில் உள்ள மையச் செயலகம் (CPU) அல்லது நுண்செயலி (microprocessor) என்று அழைக்கப்படும் மிகச் சிறிய ஒரு செவ்வக வடிவச் சில்லு(tiny rectangular chip). உங்கள் கணினியின் மூளை (brain) போல — கட்டளைகளைப் புரிந்துகொண்டு கணக்கிடுவது இந்தப் பகுதிதான்.

கணினி வன்பொருள் சாதனங்கள்

கணினி வன்பொருள் சாதனங்கள் எனப்படுவது, உங்கள் திரையகம் (monitor), விசைப்பலகை (keyboard), சுட்டி (mouse), அச்சுப்பொறி (printer), மற்றும் பிற வன்பொருள் (hardware) உபகரணங்கள். இந்த வன்பொருள் சாதனங்கள் ஆனது கணினியில் நிறுவியுள்ள கணினி இயக்கமுறைமையை (computer operating system) தொடர்புக்கொண்டு கட்டளைத் தரவுகளைப் பறிமாறிக்கொள்கின்றன. எனவே இயக்கமுறைமை (operating system) இல்லாமல் வன்பொருள் சாதனங்கள் கணினி அமைப்பில் செயல்படுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.

கணினி மென்பொருள் கோப்புகள்

மென்பொருள் (software) என்பது, வன்பொருளுக்கு (hardware) வேலை கொடுக்கும் கட்டளைகளை (instruction sets ), அல்லது நிரல்களை (programs), குறிக்கிறது. உங்கள் கணினியில் கடிதங்கள் எழுதப் பயன்படுத்தும் சொற்செயலி ( word processing program ) ஒரு வகை மென்பொருள்தான். இயக்க முறைமை (Operating system) என்பது உங்கள் கணினியையும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்களையும் நிர்வகிக்கும் மென்பொருள். Windows -உம் Mac OS -உம் பரவலாக அறியப்பட்ட இரண்டு இயக்க முறைமைகள் (operating systems).

கணினியின் வரலாறு

1946இல் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினிதான் உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி (first general-purpose electronic computer). அது அமெரிக்க ராணுவம் பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது. ENIAC பிரம்மாண்டமான ஒரு கணினி. அதன் எடை 27,000 கிலோகிராமுக்கு (60,000 பவுண்டுகளுக்கு) மேல் இருந்தது; அது ஒரு பெரிய அறையையே நிரப்பக்கூடியதாக இருந்தது. தரவைச் செயலாக்க (To process data), ENIAC சுமார் 18,000 வெற்றிடக் குழாய்களைப் (vacuum tubes) பயன்படுத்தியது. இதில் ஒவ்வொரு குழாயும் ஒரு சிறிய பல்பின் அளவு இருக்கும். அந்தக் குழாய்கள் எளிதில் தீர்ந்துபோனதால் (burned out) தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.

கணினியின் தோற்றமும் வளர்ச்சியும்

கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. கணினி உருவாக இதுவே முதல் படிவமாக அமைந்தது. பாரிசு நகரை சார்ந்த பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார். கி.பி. 1833 இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால், முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டார். மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, ஹார்வார்டு பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் ஹோவார்டு ஜாக்கன் என்பவரை ஐ.பி.எம். பொறியாளர் துணையுடன் எண்ணிலக்கக்  கணினியைக் கண்டறித் தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்-1 எனப் பெயரிட்டனர். தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.

கணினியின் வகைகள்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகக் கணினியிலும் புதுமையான அமைப்புகள் தோன்றியவண்ணம் உள்ளன. இன்றைய நிலையில், பல்லூடக வசதிகொண்ட கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. கணினியைப் பயன்படுத்துவோரின் தேவை அதிகரிக்க அதிகரிக்க கணினியின் வளர்ச்சியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இதனுடன் இணையத்தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.

இணையம்

இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் என்னும் அமெரிக்கராவர். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க, இணையம் பயன்படுகின்றது. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைகள் பற்றி இணையத்தின் வாயிலாகச் செய்திகளை அறிய முடிகிறது.

கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. 1960 ஆம் ஆண்டில், ஒரு கணினியிலிருந்து மற்றொரு கண்னிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். இது மிகுந்த காலச் செலவை ஏற்படுத்தியது. இதற்காக மாற்றாக, ஒரு கட்டத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச்சுருளுடன் இணைக்க ஈதர்நெட் அட்டை என்னும் சிறுபலகையைப் பொருத்தி பயன்படுத்தினர். இந்த இணைப்பு குறும்பரப்பு வலைப்பின்னல் எனப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வட்டாரத்துக்குள் உள்ள கணினிகளை இணைத்தனர். இஃது அகன்ற பரப்பு வலைப்பின்னல் கொண்டது. இந்த வலைப்பின்னல் வழியாக உலகம் முழுவதும் உள்ள கணினிகளை ஓரளவுதான் இணைக்க முடிந்தது. முழுமையான இணைப்பைப்பெறச் செயற்கைக்கோள்வழி இணைப்பினைப் பயன்படுத்திப் புவியைச் சுற்றி, நாடுகளின்மீது வலம்வரும் விண்வெளிக்கலண்களுக்கு இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உலகம் முழுமைக்கான வலையமைப்பு இணையம் எனப் பெயர் பெற்றது.

சுவிச்சர்லாந்து நாட்டைச் சார்ந்த பிம்பெர்னர் லீ என்னும் இயற்பியல் வல்லுநர், 1989 ஆம் ஆண்டு இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப்பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் ஆழைக்கலாம். இவ்வலையமைப்பு, பலசெய்திகளை அழியாமல் பாதுகாக்க உதவுகிறது

இணையத்திற்குத் தேவையானவை

பேரூர் முதல் சிற்றூர் வரை இணையத்தள வசதிகள் கிடைக்கின்றன. இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையான பொருள்களாவன.

1. கணினி

2. தொலைபேசி

3. இணையச் சேவை வழங்குநர்

4. மாற்றி (network interface card)

5. தொடர்பு மென்பொருள்

இவற்றைக்கொண்டு இணையத் தொடர்பைப் பெறலாம். இணையத்தைப் பயன்படுத்த, இணையச் சேவைக்கு உரியவரிடம் தனிக்கணக்குத் தொடங்குதல் வேண்டும். பின்பு, கணினியை இணையத்தளத் தடத்தில் இணைத்தல் வேண்டும்.

இணைய இணைப்பு வகைகள்

தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை, தொலைபேசி இணைப்புச் சேவையாகும். இம்முறையில் விரைவும் வசதியும் குறைவாக இருந்தமையால், புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. வையக விரிவு வலை செயல்படுவதைக் கொண்டு, இணைய இணைப்பு நான்கு வகையில் கிடைக்கின்றது. உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு, கம்பி வடமாற்றி, செயற்கைக்கோள் சேவை, கண்ணறைச் சேவை என்பன ஆகும்
கணினிவழிக் கல்வி

கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வியே கணினிவழிக் கல்வி. வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள இயலும். தொலைதூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினிவழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.

இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் முதலியவற்றுக்கான தீர்வுகளைப் பெறவியலும். தீர்வுகளைப்பெற மின்னஞ்சல் முகவரி உதவுகிறது. வீட்டிலிருந்தபடியே நேருக்குநேர் தொடர்புகொண்டு கற்கும் வாய்ப்பும் இன்று கிடைக்கின்றது.

கணினிவழியாக மொழிக்கல்வியும் பெறவியலும். மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் எனத் தொடங்கி உயர்நிலைத் திறன்களான கதை, கட்டுரை, செய்யுள், பாடல், கடிதம். சுருக்கி வரைதல், விரித்தெழுதுதல், குறிப்பெடுத்தல், அகராதி தேடல் என அனைத்தையும் இணையம் வாயிலாகக் கறக இயலும்.

உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழறய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துகளை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது
கணினியின் பயன்கள்

கணினி, நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய,  பல்துறைகளில் பயன்பட்டு வருகிறது. சொல் விளையாட்டு, பொறியியல் வரைபடம் வரைதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள், கணிதத் தேற்றங்களின் தீர்வுகள் போன்ற அரிய பணிகளையும் கணினி எளிமையாகச் செய்கிறது.

பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. அது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது.

உள்ளங்கையில் உலகம். தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விடக் கடந்த இருபதாண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பல நூறு மடங்காகும். இன்று ஒருவரை நேரடியாகப் பார்க்காமலே மின்னனுத்தகவல் வாயிலாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ வாய்ப்பைப் பெறவும் இணையம் உதவுகிறது. கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்லவேண்டும். எனினும் கணினி வல்லுநர் பில்கேட்ஸின் கூற்று, இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.

கணினியின் பயன்பாடுமிக்குள்ள இந்தக் காலத்தில், தொழில்நுட்ப உத்திகள் அனைத்தையும் பயன்படுத்திக் கணினிவழியாகத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் பெறமுடிகிறது. இந்நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி, அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழ்கிறது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் புதுமைகளான கணினியும் இணையத்தளமும் தொலைத்தொடர்புக் கருவிகளும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு  வந்துள்ளன.